MORNING PRAYER
காலை ஜெபம்
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.
உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
(திருப்பாடல்கள் 90:13-17)
அனைத்துலகின் இறைவா! இந்த காலை வேளையிலே, உண்மை போற்றி புகழ்கிறோம். நற்கருணையில் எங்களோடு வாழும் உமக்கு, நன்றி ஆராதனை செய்கிறோம்.
அன்பான தந்தையே, எங்கள் மீது கொண்ட தீராத அன்பினால், உமது திருமகனையே எங்களுக்காக பலியாக்கினீர். ஆனால் நாங்கள், உமது அன்பில் இருந்து பல நேரங்களில் விலகிச் சென்று விடுகிறோம்.
அன்பான தந்தையே! நாங்கள் உமது அன்பிலிருந்து நீங்காமலும், உமது அரவணைப்பிலிருந்து வெளியே வராமலும் இருக்க, எங்களுக்கு துணை செய்யும்.
ஆண்டவரே! நாங்கள் படுக்கையில் இருந்து விழித்தெழுவது போல, பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக, சாத்தானின் எல்லா விதமான சூழ்ச்சிகளையும் அறிந்தவர்களாய், அவனது வலையில் இனி ஒருநாளும் சிக்காமல் இருப்போமாக. உமது அரவணைப்பில் எங்களை வைத்து பாதுகாத்தருளும்.
இவ்வாறு எங்கள் வாழ்நாள் எல்லாம் உமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்து, எங்கள் வாழ்வின் மூலம் உம்மை வெளிப்படுத்தி வாழ, எங்களுக்கு தேவையான வரங்களை தந்துருளும்.
இன்றைய எங்களின் ஒவ்வொரு செயல்களையும் ஆசீர்வதியும். சோர்வின்றி எங்களின் அன்றாடப் பணிகளை, உமது ஞானத்தின் வழியில் நிறைவுடன் செய்ய, தேவையான அருளை வேண்டி மன்றாடுகிறோம்.
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.