MORNING PRAYER—IMMACULATE HEART OF MARY
மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்.
ஒ.! மரியாயின் மாசற்ற இருதயமே! இயேசுவின் திருஇருதயத்தின் மாதாவே ! எங்கள் இல்லத்தின் அரசியும் அன்னையுமாகிய மாமரியே ! உமது அதிமிகு விருப்பத்தின்படி எங்களை உம்மிடம் அர்பணிக்கின்றோம்.🙏 நீரே எங்கள் குடும்பங்களை ஆண்டருளும். எங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தும். இயேசுவின் திருஇருதயம் எவ்வாறு உம்மை ஆண்டு நடத்தினாரோ, அது போல் எங்களையும் ஆண்டு வழிநடத்தும்படி செய்தருளும். ஒ அன்பு நிறைந்த அன்னையே! நாங்கள் எப்பொழுதும் வளமையிலும், வறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், வாழ்விலும், மரணத்திலும், உம்முடையவர்களாகவே இருக்கும்படி செய்தருளும்.
ஒ இரக்கமுள்ள மாதாவே! கன்னியர்களின் அரசியே! எங்கள் ஆன்மாக்களையும், இருதயங்களையும் காத்தருளும். அகங்காரம், கற்புக்கெதிரான சிந்தனைகள், அஞ்ஞானம் போன்ற தீமைகள் எங்களை நெருங்காதவாறு செய்தருளும். மாதாவே தேவரீருக்கும், தேவரீருடைய திருமகனுக்கும் எதிராக செய்யப்படும் எண்ணற்ற பாவங்களை பரிகரிக்க ஆவல் கொண்டுள்ளோம். தாயே ! எமது இல்லங்களிலும், உலகெங்குமுள்ள இல்லங்களிலும் இயேசு கிறிஸ்து நாதரின் அன்பையும், அருளையும் பிரகாசிக்க செய்தருளும். 🙏
ஆண்டவரே, உமது புண்ணிய மாதிரிகையை நாங்கள் கண்டு பாவிக்கவும், ஓர் உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழவும், அடிக்கடி தேவநற்கருணை வாங்கவும், முகத்தாட்சன்யத்தை புறந்தள்ளவும் வாக்களிக்கின்றோம். வரப்பிரசாதத்தின் சிம்மாசனமே! அரிய நேசத்தினுடைய மாதாவே நம்பிக்கையோடு உம்மை அண்டி வருகிறோம். உமது மாசற்ற இருதயத்தில் பற்றி எரியும் தெய்வீக நெருப்பு எமது இருதயத்திலும் பற்றியெரியச் செய்யும்.
தாயே! பரிசுத்ததனமும், ஆன்ம தாகமும், பரிசுத்த கிறிஸ்தவ வாழ்வும் என்மேல் சுமத்தும். அத்துணை சுமைகளையும் பரிகார கருத்தோடு தவமுயற்சியாக நாங்கள் உமது மாசற்ற இருதயத்தின் வழியாக இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் திருஇருதயத்திற்கும் மரியன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் முடிவில்லாத காலமும் நேசமும், புகழ்ச்சியும் மகிமையும் உண்டாவதாக.