திருப்பாடல் : 118
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்.
(திருப்பாடல் 118:1-2,4. 22-27)
🛐 ஜெபம் 🛐
என்றென்றும் எங்கள் மீது அளவில்லா பேரன்பு கொண்ட எங்கள் அன்பு ஆண்டவரே! அந்த அளவற்ற அன்பின் நிமித்தம் உமது மகனை மனுக்குலத்தின் மீட்பிற்காக அளித்த முன்வந்த எம் இறைவா ! உம்மை வாழ்த்தி வணங்கி போற்றி ஆராதனை செய்கின்றேன்.
இறைவா! என் வாழ்நாளில் பிறர் என்னை என்ன நினைப்பார்களோ? என்று எண்ணி நான் நற்செய்தியை துணிவோடு அறிவிக்காது இருந்த தருணங்களுக்காக உம்மிடம் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன். மன்னிக்கும் தேவனே! என்னை மனமிரங்கி மன்னித்தருளும். 🙏
இயேசுவே! அகில உலகின் மீட்பரே! திருத்தூதர்கள் பேதுருவுக்கும், யோவானுக்கும் தூய ஆவியின் வழி நடத்துதலும், மனத் துணிவினையும் நீர் அளித்தது போல எங்களுக்கும் அளித்தருளும்.
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!” என்று திருப்பாடல்களின் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைவரும் சமூகத்தில் மூலைக் கற்களாக மாற இயேசுவே உம்மை மன்றாடுகின்றோம்.
இயேசுவே, துவண்டு கிடந்த உமது சீடர்களுக்கு நீர் மூன்றாம் முறையாக காட்சி அளித்து அவர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் நீர் ஊட்டியது போல எங்கள் உடலும், உள்ளமும் சோர்ந்த வேளைகளில் நீர் எங்களோடு இருந்து எங்களைக் கைதூக்கி விடும்.
உயிர்த்த இயேசுவே! மகதலா மரியா உம்மை அடையாளம் கண்டு கொண்டது போல நாங்கள் இன்று சந்திக்கும் நபர்களில் உம்மை இனம் கண்டு கொள்ள அருள்புரியும்.