PSALM 145
திருப்பாடல் : 145
MORNING PRAYER
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!
(திருப்பாடல் 145: 17-21)
🛐 ஜெபம் 🛐
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! விடுதலை அளிப்பவரே! விரும்பிக் கேட்பவற்றைக் கொடுப்பவரே! உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் புகழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்.
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், அண்மையில் இருக்கும் என் ஆண்டவரே உமக்கு நன்றி.🙏
இந்த காலை வேளையில் உம்மை நினைப்பது, உம்மைப் புகழ்வது, உம்மிடம் செபிப்பது மனதுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும், ஆற்றலைக் கொடுப்பதாகவும் உள்ளது.
இறைவா! ஓய்வுநாள் சட்டத்தைப் பற்றி பேசிய பரிசேயர்களைப் போல் நானும் பிறரிடம் குறை காணும் போக்குடன் இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் அன்பு குறையும் இடத்தில்தான் குறைகள் பெரிதாகத் தெரியும் என்பதை நான் உணர்வேன். எனவே பிறரிடம் குறை காணும் குணத்தினை இனி நான் அடியோடு தவிர்ப்பேன்.
இயேசுவே, பிறரிடத்தில் குறை காணும் போக்கு உமது அன்புக் கட்டளையை நிறைவேற்ற எப்போதும் தடையாக உள்ளது என்ற உண்மையை நான் அனுதினமும் உணர்வேனாக. அன்பு பிறரிடத்தில் நிறைகளை மட்டுமே காணும் என்பதை நான் என் வாழ்வில் செயல்படுத்த அருள் புரிவீராக.