ஆசிரியர்களே சான்றோர்கள்
ஆசிரிய பணி தெய்வீ கமானது
ஆசிரிய பணி புனிதமானது
ஆசிரியர்களைப் போற்றுவோம்
ஆசிரியர்களை வணங்குவோம்
சோனுவுக்கு தூக்கமே வரவில்லை. அவன் பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த பலனை நினைத்து நினைத்து புரண்டு படுத்தான். இறந்த அவனது அப்பா கண்ட கனவு நனவாகிவிட்டது. மாற்று திறனாளியான தன்னை தன் அப்பா எந்த குறையுமில்லாமல் வளர்த்தது மட்டுமல்லாமல், அனைத்து துறையிலும் தான் முன்வர வேண்டுமென்று அவர் எடுத்த முயற்சிகளை எண்ணி அப்பா ,அப்பா என்று முனகினான் . அவன் போட்டியில் வெற்றி பெற்றதையும் அவனுக்கு கிடைத்த பரிசுகளையும் நினைக்கும்போது புல்லரித்தது.
அவன் வெற்றி பெற்று நாடு திரும்பிய பொழுது அவனுக்கு கிடைத்த வரவேற்பு ஏதோ நாட்டின் தலைவருக்கு வரவேற்பு நிகழ்ந்தது போன்று இருந்தது. அவனுடைய ஆசிரியரும் அவனுக்காக சிறப்பான வரவேற்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் ‘என் மாணவன் ‘ என அவனுடைய புகைப்படத்தை விதவிதமான அலங்காரங்களுடன் பெருமையோடு அனைவரும் பார்த்து பெருமை படும்படி ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் மலர் தூவி அவனை வரவேற்றனர். அவனுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு வீரரை ஆசிரியரின் சொந்த செலவிலேயே அழைத்திருந்தார். அவனே வியந்து போகும் அளவிற்கு கூட்டம் கூடியிருந்தது.
ஆசிரியரின் கனவை நனவாக்கிய மாணவன் என்ற பெருமையை சூடிக்கொண்டவனாக அவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. “இன்றைய நான் நேற்றைய என் ஆசிரியரின் கனவு பிம்பம்” என்று நன்றியோடு பேசினான். அவரின் உற்சாக வார்த்தைகள், தூக்கி விட்ட தருணங்கள், தோல்வி அடைந்த நேரங்களில் நம்பிக்கையோடு ஆதரவு அளித்தது அனைத்திற்கும் நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் அவரே எனது பெற்றோரின் மறு உருவம் என்றான். அரங்கமே அதிர்ந்தது. பலத்த ஓசை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
அவன் எழுந்து தனது தந்தையின் அறைக்கு சென்றான். அறை முழுவதும் புத்தகங்களால் நிறைந்து இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கும் பொழுது டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் அவன் தந்தை எடுத்த புகைப்படத்தை தனது கரங்களால் தொட்டு பார்த்தான். அப்பொழுது அவனுக்கு யாரோ தன்னை தொடுவது போல இருந்தது. என் கூட வா என்று அழைத்தது அவனும் சென்றான். டாக்டர் அப்துல் கலாம் யாருடனோ பேசுவது போன்று கேட்டது. அவனும் உற்று கவனித்தான் . அது ஒரு விசித்திரமான பகிர்வு.
அந்த பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பள்ளியில் சந்திப்பதற்கு யோசனை செய்தனர். அவர்கள் தீர்மானம் செய்தபடியே அன்றைய நாளில் பள்ளியை நோக்கி புறப்பட்டனர். பள்ளியின் வெளிப்பகுதியிலேயே இறங்கி காலாற நடந்து சென்றனர். வளாகம் முழுவதும் உள்ள மரங்கள் அவர்களை கிளைகளை அசைத்து மலர் தூவி வரவேற்றன.
மலரும் நினைவுகளுடன் தங்களிடம் பயின்ற மாணவர்கள், உடன் உழைத்த ஆசிரியர்கள், உதவிய நண்பர்கள் மற்றும் பள்ளியுடன் தொடர்பு கொண்ட நல்ல மனிதர்களும் நினைவுக்கு வந்தனர். பள்ளி முழுவதுமே அவர்களை வரவேற்றது. உள்ளே சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியரில் ஒருவர் பள்ளியின் நூலகத்தை சந்திக்க சென்றார். அதை சுற்றி பார்த்து கொண்டே ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து புத்தகங்களை கரங்களில் எடுத்து புரட்டி பார்ப்பதும், அரவணைத்து கொள்வதுமாக இருந்தார். கண்களில் ஆனந்த கண்ணீர் புரண்டோடியது. அவர் அப்பள்ளியில் வேலை செய்த காலங்களில் “எதிர்காலத்தில் நான் ” என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவரையும் எழுத வைத்து அதை புத்தகமாக்கி நூலகத்திற்கு அர்ப்பணித்தார். அனைத்து புத்தகங்களையும் பார்த்து அவருக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது.
மற்றொரு ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆசிரியர்களின் அறையை சந்திக்க சென்றார் . ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தை செலவிடும் அந்த அறையை சுற்றி பார்த்து ஆனந்தம் அடைந்தார். அவர் வேலை செய்த நாட்களில் ஆசிரியர்களின் உதவியோடு “என் சமுதாயத்திற்கு என் பங்கு ” என்ற தலைப்பில் நல்ல சிந்தனைகளை, கவிதைகளை எழுதி அந்த அறை முழுவதையும் அலங்கரித்திருந்தார். அது அவ்வளவு அழகாகவும், மேன்மை மிக்கதாகவும் இருந்தது.
மற்றொருவர் பள்ளி வளாகம் முழுவதையும் சுற்றி வந்தார். விதவிதமான வண்ணங்கள் தீட்டிய படங்கள் அந்த பள்ளி முழுவதற்கும் அழகு சேர்த்தது. அவர் அந்த பள்ளியில் வேலை பார்த்த நாட்களில் “நாளைய என் உலகம் ” என்ற தலைப்பில் மாணவர்கள் பல விதமான வண்ணங்களுடன் படங்கள் வரைந்து சுவர்களில் மாட்டியிருந்தனர். அது இன்றும் உணர்த்தும் செய்தியை பார்த்து அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை.
ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் மைதானத்துக்கு சென்று சுற்றி பார்த்தார். மைதானத்தின் ஒரு பகுதியை நோக்கி விரைந்து சென்று தொட்டு தொட்டு பார்த்தார். பள்ளியின் உதவியோடு மாணவர்களை உற்சாக படுத்தி சிறு சிறு பாறைகளை அமைத்து ” என் தலைவர்” என்ற தலைப்பில் கற்களில் காவியம் படைக்க செய்தார் . அதை இன்றும் அப்பள்ளி பாதுகாத்து வருவதை நினைத்து புன்னகை புரிந்தார்.
ஓய்வு பெற்ற மற்றொரு ஆசிரியர் பள்ளியின் கலைஅரங்கத்தை பார்க்க சென்றார் . அவரின் உதவியால் கலை அரங்கம் முழுவதும் பயனற்ற பொருள்களை வைத்து அலங்காரம் செய்திருந்தனர். இன்றும் அவற்றின் அழகை ரசித்து பழைய நினைவுகளோடு மெய்சிலிர்த்து போனார்.
அனைவரும் மீண்டும் பள்ளியின் ஹாலில் சந்தித்தனர். அவர்களை காண விருந்தாளிகள் அழைக்க பட்டனர். அவர்கள் வேறு யாருமில்லை. இந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் மாற்று திறனாளிகள். அவர்கள் தங்களின் வாழ்வில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் இந்த ஆசிரியர்களின் உதவியால் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.
இன்று அனைவரும் இணைந்து இரண்டாயிரத்து இருபத்தி ஒன்று மரங்கள் நட்டு இந்த நாளை செலவிட கூடியிருந்தனர். அப்படியே மரங்களை நட்டு உலகிற்கு அழகு சேர்த்தனர். உலகிற்கு தங்களால் முடிந்த நன்மைத்தனத்தை செய்ததை நினைத்து பெருமை கொண்டனர். அதே பணியை தொடர்ந்து செய்ய கேட்டு கொண்டனர்.
அப்துல் கலாம் அய்யாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உயிரளிப்பவையாக இருந்தது. பக்கத்தில் சென்று அவரிடம் பேச ஆசைப்பட்டான் . தனது தந்தையோடு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பேச நினைத்தான். எப்படி தொடங்குவது என்று குழப்பமாகவும் பேசுவதற்கு தயக்கமாகவும் இருந்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு அவரின் அருகில் சென்றான்.
கையை நீட்டி அவரின் பாதங்களை தொட முயற்சிக்கும்போது அலாரம் அடித்தது. அப்பா அப்பா என்று கண் விழித்து பார்த்தான் . அவன் அன்று உலக ஆசிரியர் தினத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றுவதை நினைத்து பெருமிதம் கொண்டான்.