வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்:
களங்கமற்ற ஆரோக்கிய அன்னையே! இறைவனின் கொடைகளைப் பெற்றுத் தரும் பேருபகாரியே வாழ்க! தூய எலிசபெத் வீட்டில் நீர் தங்கி இருந்தபோது, அவ்வீட்டாருக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் எத்தனையோ நன்மைகள் கிடைக்கச் செய்தீர். வேளாங்கண்ணித் திருத்தலத்தில் வீற்றிருக்கும் நீர் எங்களுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் பெற்றுத் தாரும். உமது தயவால் இத்திருத்தலத்தில் பார்வை பெற்றோரும், ஆரோக்கியம் அடைந்தோரும், பாவ வழி விட்டு மனந்திரும்பியோரும், ஆறுதல் அடைந்தோரும் எத்தனையோ பேர்! ஓ, தயை நிறைந்த தடாகமே! இரக்கத்தின் திரு உருவே! மனித குலத்துக்கு நீர் செய்துள்ள பேருபகாரங்களுக்கு வணக்கத்துடன் நன்றி கூறுகின்றோம். உம்மை உயர்த்திய எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து ஆராதிக்கிறோம். எங்களுக்காக என்றும் இறைவனிடம்
மன்றாட உம்மை வேண்டுகின்றோம். கன்றை அறியாப் பசுவில்லை. சேயை அறியாத் தாயில்லை. நீர் மனுக்குலத்தின் தாயாக உள்ளீர். உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் உம் அன்புக் கரங்களில் வைத்துக் காத்தருளும். மேலும் கிறிஸ்துவை நிராகரித்தவர்களும், பாவ வழியில் வாழ்பவர்களும் மனந்திரும்பவும், எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.