🌿 வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்
ஓ, தூய அன்பின் அன்னையான ஆரோக்கிய கன்னிகையே! நீர் இயேசுவின் தாய் என்பது பற்றி மிக்க பெருமை கொள்கிறோம். உம்மை உள்ளத்துடன் ஏற்றிப் போற்றி வாழ்த்துகிறோம். இறை தூதர் அறிவித்த நற்செய்தியைத் தாழ்ச்சியான உள்ளத்துடன் ஏற்றுக் கொண்டீர் என்பதை நாங்கள் பக்தியுடன் தியானிக்கின்றோம் அருள் நிறைந்த மரியே வாழ்க! நீர் இறை மகனைக் கருவாக உமது திரு வயிற்றில் ஏந்திய நேரம் முதல், உம் புகழ் விண்ணோக்கி வளர்ந்தது. வரங்களும் அருளும் உம்மில் நிறைந்திட நீர் இறைவனின் தாயானீர். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. கிறிஸ்துவில் நீர் பெற்ற புது வாழ்வில் நாங்களும் பங்கு கொண்டு, அருள் நிறைந்தவர்களாக இருக்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உமது தாழ்ச்சியைக் கண்ட விண்ணக அரசர் உம்மில் மனிதனானார். உமது நிகரில்லாக் கற்பின் மணம் கமழ தூய ஆவியார் உம் மீது எழுந்தருளினார். ஓ, கருணை நிறைந்தவளே! உம்மில் இறைவன் ஒன்றித்தது போல், அருள் சாதனங்கள் வழியாக நாங்களும் அவருடன் ஒன்றித்து வாழ எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும். ஆதித் தாயின் தீவினையால் சபிக்கப்பட்ட மனுக்குலம் உம் வழியாக ஆசீர் பெற்றுள்ளது. ஓ, மாதர்களின் மாணிக்க ஒளிச் சுடரே! தாய்மார்களின் தூய இரத்தினமே! சுந்தரவதிகளின் சுந்தரியே! எல்லாத் தலைமுறைகளும் உம்மைப் பேறுடையாள் எனப் போற்றுமே. உம்மைப் பணிந்து வாழ்த்துகிறோம் தாயே! எங்களை உம் அன்புக் கரங்களால் ஆசீர்வதித்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(தூய ஆரோக்கிய அன்னையின் புகழ்மாலையைச் சொல்லவும்)