திருப்பாடல் : 33
PSALM 33 —–MORNING PRAYER
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
(திருப்பாடல் 33: 12-15, 20-21)
🛐 ஜெபம் 🛐
அகில உலகையும் படைத்த எம் இறைவா! உம்மைப் போற்றுகின்றேன். உம்மைப் புகழ்கின்றேன். உம்மை ஆராதனை செய்கின்றேன்.
இறைவா, இந்த புதிய நாளை கொடுத்தமைக்கு உமக்கு நன்றி. இன்றளவும் என்னைக் கண்ணின் மணி போல காத்துவரும் உம் கிருபைக்காகவும் நன்றி. 🙏
ஒவ்வொரு நாளும், நான் உமது பண்படுத்தும் தோட்டமாக இருக்கும் நற்பேற்றிற்காகவும் நன்றி தந்தையே. 🙏
என்னைப் பேணிக் காக்க என் சிறு வயது முதல் என் வாழ்க்கைத் தோட்டத்தில் நடுகிறவர்களையும், நீர்ப் பாய்ச்சுகிறவர்களையும் அனுப்பி என்னை ஞானத்திலும், கல்வியிலும், நற்ப்பண்பிலும் வளர்த்தீர். நடுகிறவர்களுக்கும், நீர் பாய்ச்சுகிறவர்களுக்கும் பெருமை இல்லை. ஆனால் என்னை விளையச் செய்த கடவுளாகிய உமக்கே எல்லா பெருமை. உமக்கே மகிமை, துதி, கணம் அனைத்தும் அப்பா.
குணமளிக்கும் மருத்துவரே! அன்று கடும் காய்ச்சலால் துன்புற்ற பேதுருவின் மாமியாரைக் குணமாக்கியது போல இன்று காய்ச்சலால் துன்புறும் ஒவ்வொரு பிள்ளைகளையும் கண்ணோக்கிப் பாரும். அவர்களை உம் திருக் கரங்களால் தொட்டுக் குணமாக்கும்.
இறைவா இந்த நாளில் என் இல்லத்தில் நான் அனைவருடனும் சமாதானமாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்க அருள் புரிவீராக.
இயேசு மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.