திருப்பாடல் : 145
MORNING PRAYER
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர். ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.
(திருப்பாடல் 145 : 8-14)
🛐 ஜெபம் 🛐
இரக்கமும், கனிவும், பேரன்பும் கொண்ட எம் இறைவா! இந்த காலை வேளையில் உம்மைப் போற்றுகின்றேன்! உம்மைப் புகழ்கின்றேன்! நன்றி கூறுகின்றேன்.
இறைவா! இந்நாள் முழுவதும் எனக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் கிடைக்கப் பெற அருள் புரிவீராக. அப்போதுதான் என் வாய் மனித ஞானத்தால் கற்றுக் கொண்ட சொற்களைப் பேசாமல் தூய ஆவியானவர் கற்றுத் தரும் சொற்களையே பேசும்.
இயேசுவே! பல குடும்பங்களில் ஏற்படும் குழப்பம், சமாதானமின்மை, சண்டை, சச்சரவு ஆகியவற்றிற்குக் காரணமான தீய ஆவிகளை உமது வானளாவிய அதிகாரத்தால், வல்லமையால் விரட்டிவிடும். அக்குடும்பங்களில் குடும்ப செபமாலை சொல்லும் வழக்கத்தினால் நிலையான அமைதி, சமாதானம் குடிகொள்ள அருள் புரிவீராக.
இறைவா, இந்த நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களைக் காத்து வழி நடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
ஆமென்.