காலை ஜெபம்
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.
(திருப்பாடல்கள் 84:1-5)
ஜெபிப்போமாக
விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலைப் பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகிறோம்.
உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர். ஆனால், மனிதனை உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர். ஆகவே, உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!
அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும் அப்பா.
இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும், பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.