காலை ஜெபம்
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.
ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
(திருப்பாடல்கள் 95:1-6)
✝️ஜெபிப்போமாக🛐
அன்பு தெய்வமே! இயேசு கிறிஸ்துவே! இதோ இந்த காலை வேளையிலே, உம்மை போற்றுகின்றோம். உம்மோடு பேச, உமது பாடுகளை தியானிக்க, அதில் பங்கெடுக்க வந்திருக்கும் எங்களை ஆசீர்வதித்தருளும்.
அப்பா! நீர் இறைமகனாக இருந்தாலும், உம்மிடம் இவ்வளவு தாழ்ச்சி, இவ்வளவு பணிவு, இவ்வளவு அன்பு என சொல்லிகொண்டே போகிறேன்.. அப்பா! உமக்கு முன்பாக நான் ஒரு குப்பை, எதற்கும் உதவாத குப்பையை போல் இருக்கிறேன். எங்களையும் உமது தாழ்ச்சி ஆட்சி செய்யட்டும், இதோ எங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம், உமது தாழ்ச்சியின் பாதையில் எம்மை வழிநடத்தும்.
ஆண்டவரே! என் உள்ளத்தை தூய்மையாக்கும், எங்கள் பாவத்தை உமது இரத்தத்தால் கழுவியருளும், எனது உள்ளத்தை நீர் வாழும் இல்லமாக மாற்றும். உம்மைப்போல நாங்களும், எங்களின் சகோதர சகோதரிகளுடன் இருக்கும் வெறுப்பு, மனக்கசப்பு, ஆகியவற்றை விலக்கி, தாழ்ச்சியின் வழிநடக்க உதவி புரியும் அப்பா.
அன்பு தெய்வமே! தினசரி வயிற்று தேவைக்காகவும் மற்றும் மறைந்து போகும் புகழுக்காகவும், நாங்கள் உம்மை மறந்து பிற வேலைகளில் ஈடுபடுகிறோம், எங்களை மன்னியும். இதுபோன்ற, உலக செயல்களில் ஈடுபடும் எங்களை தீயோனிடமிருந்து மீட்டருளும். எங்கள் மனதை, உண்மையின் பாதையில் நடத்தியருளும். தீயோனின் சதி செய்யல்களை நாங்கள் கண்டறிய எங்களுக்கு உதவி செய்வீராக! மேலும், பாவம் எங்களை ஒருநாளும் மேற்கொள்ளாதவாறு எங்களை காத்திடுமாறு உம்மிடம் இறைஞ்சி மன்றாடுகின்றோம்.