காலை ஜெபம்
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.
(திருப்பாடல்கள் 18:1-5)
விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவனுக்கு எல்லா புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும் – ஆமென்!
இரக்கம் நிறைந்த விண்ணக தந்தையே! இதோ இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகின்றோம்! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது அன்பிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.
விண்ணக தந்தையின் மகனாகிய இறைவா! மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பிக்க, மனிதனாகவே பிறந்த தெய்வமே! உம்மை நோக்கி இந்த நேரத்தில் மன்றாடுகின்றோம்; இவ்வுலகில் நீர் சீடர்களோடு சகோதரர்களாகவும், நண்பர்களாகவும், வாழ்ந்தீர்; நாங்களும் அவ்வாறு நண்பர்களுடனும், சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறோம். ஆனால், வெளிவேடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனதுக்குள் பகை உணர்வு, வெறுப்பு கொண்டு வாழ்கிறோம். எங்களின் வெளிவேடமான வாழ்க்கை, எங்களை மேலும் அன்புறவில் இருந்து பிரிக்கிறது, இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். எங்களுக்குள் எந்தவித பிரிவினையும் வேண்டாம், மனக்கசப்பும் வேண்டாம். ஒருவர் மற்றவர்களை மன்னிக்கும், நல்ல மனதை எங்களுக்கு தந்தருளும்.
ஆண்டவரே! எங்களை துன்புறுத்திய அனைவருக்காகவும், இந்த நேரத்தில் வேண்டுகிறோம். அவர்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம் அப்பா! அவர்கள் தங்களது தீய வழிகளை விட்டுவிட்டு, உண்மையின் பாதையில் வழிநடக்க அவர்களுக்கு துணை செய்வீராக!
இவ்வாறு உலகெங்கும் உள்ள உமது பிள்ளைகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக எப்போதுமே வாழும் வரத்தை வேண்டி, இப்போது ஜெபம் செய்கிறோம். ஆண்டவரே! எங்கள் மீது இரங்கும், இரக்கம் வையும், நாங்கள் பலவீனமான மனிதர்கள், எங்களது குறைகளை மன்னியும்.
இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.