காலை ஜெபம்
திருப்பாடல் : 16
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
(திருப்பாடல் 16: 1-2, 5. 7-8. 11)
ஜெபம்:
என்றும் வாழும் தந்தையே எம் இறைவா! மேலும் ஒரு புதிய நாளை எங்களுக்கு அளித்து நாங்கள் மனம் திரும்ப மேலும் ஒரு புதிய சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளித்திருக்கிறீர். நன்றி இறைவா! 🙏
இயேசுவே, “முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.” என கூறியிருக்கிறீர்.
நாங்கள் பிறரை குற்றம் காணும் போதும், பிறரது குறைகளை சுட்டிக் காட்டும் போதும் எங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டையை மறந்து விடுகிறோம். மன்னித்தருள்வீராக.
இயேசுவே இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழி நடத்தும். இன்று என் வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும், நன்மை , தீமை அனைத்தையும் இயேசுவே உமது மாசில்லா திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கிறேன்.