காலை ஜெபம்

காலை ஜெபம்

முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்.

‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?” எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.

தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.

இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

(திருப்பாடல்கள் 4:5-8)

✝️ஜெபிப்போமாக:🛐

ஒவ்வொரு நாளும் என்னை காத்து, வழிநடத்துகிற அன்பு ஆண்டவரே! இந்தக் காலைப் பொழுதினிலே உம்மை போற்றி, புகழ்ந்து ஆராதனை செய்கின்றோம்!

ஒவ்வொரு நாளும் உமது மேலான இரக்கத்தை முன்னிட்டு, எங்களை மன்னிப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்!

அப்பா! ஒவ்வொரு நாளும் எங்களை இரக்கத்தோடு கண்ணோக்குவதாலே, நாங்கள் இந்நேரம் வரை நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். நன்றி அப்பா!

என் ஆண்டவர் என்னோடு இருக்கும் பொழுது, நான் எதற்காக அஞ்ச வேண்டும்; கலங்க வேண்டும் என்று, உள்வாங்கும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தாரும். அப்பா! நாங்கள் நன்மை செய்தாலும், அது எங்களுக்கு தீமையாகவே நிகழ்கிறது.

அப்பா! எங்கள் வெளித்தோற்றத்தை பார்க்காமல், எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருப்பதை பார்ப்பவர் நீர் ஒருவரே. அப்பா! யார் எங்களை குற்றம் சாட்டினாலும், உமக்கு எல்லாம் தெரியுமே. எங்கள் உள்ளத்தில் இருக்கும் வேதனைகளையும், வருத்தங்களையும் தெரிந்தவர் நீங்க ஒருவரே!

அப்பா! நீங்க எங்க கூட இருக்கும் போது, அற்ப மனிதர்கள் எங்களுக்கு எதிராக என்ன தான் செய்ய முடியும்? இறைவா! பிறர் எங்களை வேதனை படுத்தும்போது, அவர்களை மன்னிக்கும் தன்மையை எங்களுக்கு தாரும்.

என் அன்பு இறைவா! எங்களை வெறுக்கும் அனைவரையும், நாங்கள் அன்பு செய்ய வரமருளும். எங்கள் மீது வைத்துள்ள தவறான எண்ணங்களை அவர்கள் மாற்றி கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் எங்களுக்கு வரமருளும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *