காலை ஜெபம்
திருப்பாடல் : 117
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது.
(திருப்பாடல் 117: 1,2)
ஜெபம்
கருணையும், அன்பின் செல்வந்தரும், படைப்பின் ஆண்டவருமான என் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் நினைத்து நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். படைப்பு அனைத்தோடும் சேர்ந்து நான் உம்மை போற்றித் துதித்து ஆராதிக்கின்றேன்.
என் இயேசுவே! இன்று நான் காண்பதையும், கேட்பதையும், சிந்திப்பதையும், செயல்படுவதையும், நேரிடுவதையும், அதற்கு ஏதுவான அனைத்தையும், என் இதயத்தைப் பாதிப்பவைகளையும் இன்று உலகமெங்கும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியோடு இணைந்து பரிசுத்த அன்னையின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக உமக்கு நான் காணிக்கையாக்குகின்றேன்.
இறைவா, இன்றைய ஞாயிறு திருப்பலியை பக்தியோடு பங்குபெற்று உமது திருவுடலை விசுவாசத்தோடு பெற்றுக் கொள்ளும் அனைத்து மக்களையும் நீர் ஆசீர்வதிப்பீராக. பல்வேறு பிணிகளால் வருந்தும் பலரை உமது திருக்கரங்களால் தொட்டுக் குணமாக்கிடும். உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல உடல், உள்ள சுகத்தினைத் தந்தருளும். 🙏
இறைவா, இந்த புதிய வாரத்தில் பிறருக்கு வேதனையோ, வருத்தமோ, பெயரைக் கெடுக்கும் யாதொன்றும் என்னில் இருந்து ஏற்படாதவாறு என் பேச்சுக்களில் கவனத்தோடும், என் செயல்பாடுகளில் விவேகத்தோடும் செயலாற்ற எனக்கு உதவியருளும். ஆன்ம பலத்தால் கோபத்தை அன்பாகப் பகிர்ந்திடவும், அன்பால் பழிவாங்கும் சிந்தனைகளை வெற்றி கொள்ளவும், பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும் சமாதானத்தை இழந்து விடாமல் உம்மையே அடைக்கலமாக்கி நான் வாழ எனக்கு உதவியருளும்.🙏
ஆண்டவரே! நன்மை தீமைகளை பகுத்தறியும் நல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும். மேலும் தூய ஆவியானவர் என்னுள் தங்கியிருக்க, என்னுள் இருந்து செயலாற்ற அருள் புரிவீராக. 🙏