காலை ஜெபம்
திருப்பாடல் : 33
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
(திருப்பாடல் 33: 2-3. 10-11. 18-19)
ஜெபம்:
தாழ்ந்தோரை உயர் நிலைக்கு உயர்த்துபவரே! எங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவரே! எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் எங்களுக்குத் தருபவரே! உம்மை இந்தக் காலை வேளையில் போற்றுகிறோம். துதிக்கிறோம். ஆராதிக்கிறோம். நன்றி கூறுகிறோம். 🙏
ஆண்டவரே! அன்று காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தனது சகோதரர்களால் அடிமையாக மிதியானியரிடம் விலைக்கு விற்கப்பட்ட யோசேப்பை பார்வோன் மன்னனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தினீரே! புறக்கணித்த கல்லை மூலைக்கல்லாக மாற்றிய ஆண்டவரே உமக்கு நன்றி. 🙏
“நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.” என்று கூறிய எங்கள் இயேசுவே! அன்று மிகச் சாதாரண மக்களை சீடர்களாகத் தேர்ந்து கொண்டு அவர்களுக்கு அதிகாரம் அளித்து பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் செய்தீர். நீர் முன்குறித்து வைத்தோரை அழைத்தீர். நீர் அழைத்தோரைத் உமக்கு ஏற்புடையவராக்கினீர். உமக்கு நன்றி இறைவா! 🙏
இந்த சமூகத்தில் சாதாரண மனிதர்களாகிய எங்களை அழைத்து, உமது அருளாலும், ஆற்றலாலும் எங்களை வல்லமை மிக்கவர்களாக மாற்றியருளும். உமது இறைத்திருவுளத்தை நிறைவேற்றும் சிறந்த கருவிகளாக எங்களை மாற்றியருளும்.
ஆமென்.
விண்ணகத்தில் இருக்கிற…(1)
அருள் நிறைந்த…(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்…(1)