காலை ஜெபம்
கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்; அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை; அவர்களின் நா கூர்மையான வாள் போன்றவை. கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
திருப்பாடல்கள் 57:1-5
என் அன்புக்குரிய இயேசு கிறிஸ்துவே, கடந்த இரவு முழுவதும் உம்மிடம் ஒப்படைக்கப்பட்ட என்னை, உமது தெய்வீக ஆசீரால் பாதுகாத்து, இப்புதிய நாளை காண செய்த இறைவா! உம்மை வாழ்த்தி போற்றி ஆராதிக்கின்றேன். உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
இயேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன். படுக்கையில் இருந்து எழுந்தது போல பாவத்தை விட்டெழுந்து, மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத்தருளும் இறைவா!
என் துன்ப நேரத்திலும், ஆபத்துக் காலத்திலும் என் ஆன்மாவைத் தூக்கி நிறுத்தி, என் பலவீனத்தை பலப்படுத்தி, என் எதிரிகளின் எல்லா தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் துணிவை அளித்து, நல்லவராகிய என் கடவுளிடமிருந்து என்றும் பிரியாதிருக்க உமது வல்லமை அளித்தருளும்.