இரவு செபம்
அன்புள்ள தந்தையே,
இதோ இந்த நாளின் நிறைவில் நான் உமது திருமுன் வருகிறேன் .
இந்த இரவானது அமைதியான போர்வைபோல, உங்கள் பிரசன்னத்தால் என்னை சூழ்ந்துகொள்ள அனுமதியுங்கள்.
இன்றைய நாளில், உமது பிரசன்னத்தால் நிறைத்தமைக்காக நன்றி. என்னை போசித்தமைக்காக நன்றி. அதிகாலையிலிருந்து இந்நேரம்வரை என்கூடவே இருந்து, எனக்கு வழங்கிய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. எனது போக்குவரத்தில் கரம் பற்றி நடந்தமைக்காக நன்றி.
பாலைவனத்தில் உள்ள உம்முடைய மக்களைப் போலவே, நானும் என் வாழ்வில் உமக்கெதிராக கேள்விகள் பல எழுப்பியுள்ளேன், என் வாழ்க்கையின் இந்த வனாந்தர நாட்களில் நான் வாழ்ந்தபோது, கடவுளாகிய உம்மை சந்தேகித்தேன், நான் அலைந்து திரிந்தேன்.. அதற்காக என்னை மன்னியுங்கள். இன்றைய நாளில் உமக்கு வருத்தம் விளைவித்தமைக்காக என்னை மன்னியுங்கள். ஆனாலும், நீங்கள் பொறுமையுள்ள கடவுள் – என்னை விட்டு ஒருபோதும் விலகிச் செல்வதில்லை என்பதை நன்கு அறிவேன்.
ஆண்டவரே, நீர் வானங்களைத் திறந்து, மன்னாவைப் பொழிந்தீர் – கைகளால் செய்யப்படாத வானதூதர்களின் உணவை கொடையாக கொடுத்தீர் என்று இன்றைய திருப்பாடலில் செபித்தோம் .
அப்பா! நீங்கள் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் நகர்ந்து கொண்டிருக்கிறீர். நான் அதைப் பார்க்காதபோதும், என்னால் அதை உணர முடியாதபோதும் கூட, நீங்கள் என்னோடு இருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
நீர் உமது மக்களை, அவர்கள் வயிறு நிரம்பும் வரை மன்னாவால் உணவளித்து, காடைகளால் நிறைத்தது போல,
என் மனதின் தரிசு நிலங்களை நிரப்புகிறவரே! என் பற்றாக்குறையை நீக்குபரே! நான் மறக்கப்பட்டதாக உணரும் தருணத்தில், “இதோ நான் இங்கே இருக்கிறேன்” என்று திடப்படுத்தும் ஆவியானவரே! அனைத்து தீய சக்திகளிடமிருந்து என்னையும், என் ஆன்மாவையும்
காத்துக்கொள்ளுங்கள்.
இன்றிரவு, நான் என் வெறுமையை உணராமலும், என் ஏக்கங்கள் என் தூக்கத்தை குழப்பாமலும், என் சுமைகள் என்னை அழுத்தமாலும், என் மனப் போராட்ட்ங்கள், வலிகள், தனிமைகள், நோய்கள் எவையும் என்னை எதுவும் செய்யாதபடிக்கு, எனக்கு துணையாக உமது காவல் தூதர்களை அனுப்பி வையுங்கள்.
என் அமைதியற்ற இருதயத்தை, சமாதானத்தால் நிறைத்துக் கொள்ளுகள். நான் இப்போது பயத்தினால் அல்ல, ஏனென்றால் பாலைவனத்தில் உணவளித்தவர்; இன்றிரவு என் அருகில் இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு துயில் கொள்வேன். அதனால் உம்மில், எனக்கு எதிலும் குறைவு ஏற்படாது.
புனித மரியே! சூசையப்பரே! எங்கள் உடலின் வலிமையை புதுப்பிக்க, நாங்கள் எடுக்கப்போகும் இந்த ஓய்வை ஆசீர்வதியுங்கள்.
இயேசுவே, புனித மரியே! சூசையப்பரே! என் இதயத்தையும், ஆன்மாவையும் உங்களிடம் தருகிறேன்.
ஆமென்.