செப்டம்பர் 21ம் நாளாகிய இன்று பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை, *திருத்தூதர்* என்று அழைக்கப்படும்
*அப்போஸ்தலரும், நற்செய்திளாளரும், மறைசாட்சியுமான*
*புனித மத்தேயு* வின்
விழாவினை *விழா திருப்பலி* கொண்டாடி புனிதரின் மறைசாட்சியத்திற்கு தனது *வணக்கத்தையும், மரியாதையையும் அஞ்சலியையும்* செலுத்தி சிறப்பிக்கின்றது.
இன்று விழா திருப்பலி ஆனதால் *உன்னதங்கலிலே முழங்கப்படும்*. இவர் *மறைசாட்சியானதால்* திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் *சிகப்பு திருப்பலி உடை* அணிந்திருப்பார்.
அன்பானவர்களே! *இவர் வெறும் புனிதர் மட்டுமல்ல. நம் இறைவனும் இறைமகனுமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் அப்போஸ்தலராக தேர்ந்து கொள்ளப்பட்டு, தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளை குணமாக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்ட திருத்தூதர்களின் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்.*
மேலும் *அண்டசாரங்களையும் , அகில உலகத்தையும், வான் மண்டலங்களையும், நக்க்ஷத்திர பெரும் கூட்டங்களையும் படைத்த கடவுளாகிய இறைமகன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் கண்களால் காணவும், ஆண்டவரோடு மூன்று ஆண்டுகள் உண்டு, உறங்கி, ஆண்டவரை தொட்டு அவர் பரிசத்தை உணர்ந்து, அவர் வார்த்தையை கேட்கவும், ஆண்டவர் செய்த புதுமைகளை காணவும், அந்த ஆண்டவரின் தாயை, நம் தாயை, கண்களால் காணவும், அவரின் அன்பையும் அரவனைப்பையும் பெறும் பாக்கியம் பெற்ற பனிரெண்டு அப்போஸ்தலர்களில் இவரும் ஒருவர்* என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும்.
இவர் நான்கு நற்செய்தியாளர்களில் ஒருவர் என்பது நாம் அறிந்ததே. மேலும் இவர் மூன்று *ஒத்தமைவு நற்செயாளர்களில் ஒருவர்* ஆவார். நம் ஆண்டவரின் பொதுப்பணியில் மூன்று ஆண்டுகள் ஆண்டவரோடு இறுதி வரை பயணித்தவர். நம் ஆண்டவரின் உயிர்ப்பிற்கும், விண்ணேற்றத்திற்கும் இவர் சாட்சியாக இருக்கிறார். ஆண்டவரின் வினேற்றத்திற்கு பின்னர், இவர் முதலில் யூதேயாவிலும், பின் பிற நாடுகளிலும் நற்செய்தியை போதித்து மறைசாட்சியாக மரித்து ஆண்டவரோடு அமர விண்ணகம் சென்றவர்.
அல்பேயுவின் மகனான நம் புனிதர், ரோமை ஆளுகையின் கீழ் இருந்த யூதேயாவின், கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில் வரி தண்டுபவராக, வரி வசூலிப்பவராக இவர் பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணி செய்தவர்களை யூத மக்கள் பாவிகளாக பாவித்து, சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினார்கள். இத்தகைய சூழ்நிலையில் தான், நம் ஆண்டவர் இவரை தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இருக்க அழைத்தார்.
வரி வசூலிக்கும் வேலை பணம் மழை கொட்டும் தொழில். அதனால் ஆடம்பரமான,அறுசுவை உணவு, சுகபோக வாழ்வு. இவை அத்தனையும் உடன் தூக்கி எறிந்து விட்டு, *அனைத்தையும் துறந்து* ,ஆண்டவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே போட்டு விட்டு ஆண்டவரின் அழைப்பை ஏற்று ஆண்டவரை பின் சென்றார். *மத்தேயு* என்ற பெயர் நம் ஆண்டவர் வைத்த பெயராக இருக்கலாம். *மத்தேயு* என்பதற்கு *அரமேய மொழியில் " யாவே கடவுளின் கொடை"* என்று பொருள்.
இவர் தன்னை அழைத்த ஆண்டவரை தன் வீட்டுக்கு அழைத்து அனைவருக்கும் இனிய விருந்தளித்தார். ஆண்டவர் இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதை பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு,அவருடைய சீடரிடம்,
*"இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?"*
என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் நம் ஆண்டவர் அவர்களை நோக்கி,
*"நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்"*
என்று பதிலளித்தார்.
நம் ஆண்டவரின் விண்ணேற்றத்துக்கு பிறகு, திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து ஜெபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியானவரின் வருகைக்கு பின்பு, அவர்கள் அனைவரும் *'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா'*" என்று ஜெருசலேம் மக்களுக்கு பறைசாற்றினர். நம் புனிதரும் சுமார் 15 ஆண்டுகள், யூதேயாவில் யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை இவர் கல்லால் எறியப்பட்டு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை கொண்டுள்ளன.
இவர் *தன் நற்செய்தியை* நம் ஆண்டவர் மற்றும் யூதர்கள் பேசிய *அரமேய மொழியில்* எழுதினார். நற்செய்தியை முதலில் எழுதியவர் இவர் அல்ல. முதலில் நற்செய்தியை எழுதியது புனித மாற்கு. ஆனால் இவரின் நற்செய்தி முதலில் வைக்கப்பட்டுள்ளது. நற்செய்தி நூல்களில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர் நம் புனிதர். இவர் *யூத கிறிஸ்தவர்களுக்காக இந்நூலை எழுதினார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான், யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா* என்று சொல்கிறார்.அதனால் தான் நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் உட்பட எல்லாமே *பழைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல்* என ஒப்பிட்டுப் பேசுகிறார்.
நம் ஆண்டவர் இயேசுவின் மூதாதையரின் பட்டியலை யூதர்கள் அங்கீகரிக்கும் வண்ணம் பதினான்கு, பதினான்காய் மூன்று கட்டமாக கொடுத்திருக்கிறார். *இயேசுவை யூதர்களின் அரசர் என்று முன்னிலை படுத்துவதே இவரின் நோக்கம்*. உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும் அறைகூவலையும் விடுக்கின்றார்.
ஆண்டவர் இயேசுவின் இறப்புக்குப் பின் கல்லறை திறப்பதையும், இறந்தோர் எழுந்ததையும் மத்தேயு பதிவு செய்கிறார். அதே போல இயேசுவின் கல்லறைக்கு வீரர்கள் காவல் இருப்பதையும் மத்தேயுவே எழுதுகிறார். *நம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமானது என்பதே மத்தேயுவின் நோக்கம்.*
பழைய ஏற்பாட்டு வசனங்களை நேரடியாக 29 இடங்களிலும், மறைமுகமாக 121 இடங்களிலும் மத்தேயு குறிப்பிடுகிறார். வேறெந்த நற்செய்தியாளரும் இந்த அளவுக்குப் பயன்படுத்தவில்லை. *இயேசு சட்டங்களை ஒழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தார்* என்பதையே மத்தேயு வலியுறுத்துகிறார்.
திருச்சபையைக் குறித்தும், விண்ணக வாழ்க்கையை மண்ணில் வாழ்வது குறித்தும் மிக தெளிவாகவும், அழகாகவும் மத்தேயுவே பதிவு செய்திருக்கிறார். ஆதிகால திருச்சபையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் வரவேற்கப்பட்ட நற்செய்தி நூல் மத்தேயு எழுதியது தான்.
அன்பானவர்களே! நம் புனிதர் *புதிய ஜெருசலேமான திருச்சபையின் பனிரெண்டு அடிகற்களாக திகழும் திருத்தூதர்களில் இவரும் ஒரு அங்கத்தினர்.* இவர் எந்த பல்கலைக்கழகத்திலும், படித்து பட்டமோ,டாக்டர் பட்டமோ வாங்கியவர் அல்ல. நம் ஆண்டவர் போதித்த நற்செய்தியை அப்படியே போதித்தவர். நம் *ஆண்டவர் வாக்களித்தபடி, புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருக்கும் போது, இஸ்ரேல் மக்களின் பன்னிரு குலத்தவரின் நடுவர்களாய் வீற்றிருக்க போகிறவர்களில் இவரும் ஒருவர்*
புனித மத்தேயு கணக்காளர்கள், வங்கிப் பணியாளர்கள், நூலகர்கள், பங்குத் தரகர்கள், சுங்க அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாவலராக இருக்கிறார்.
அனைவருக்கும் புனித மத்தேயு விழா வாழ்த்துக்கள்
புனித மத்தேயுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Engage & Support the Essay
Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.
FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:
Leave a Comment
Thanks for your comment! It will be reviewed.
Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.